பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து பணியாற்ற அமெரிக்காவிற்கு பிரான்ஸ் அழைப்பு
பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்பு போன்ற இரு நாடுகளுக்கும் பொதுவான பிரச்சினைகளை சமாளிப்பதற்கு, இணைந்து பணியாற்றுவதற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி, அதன் ஒரு அங்கமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அங்கு உரையாடிய ட்ரம்ப், ”இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த வர்த்தக உறவு காணப்படுகிறது. அதேபோன்று பயங்கரவாதம், பாதுகாப்பு என்பன நாம் எப்போதும் பேசிக்கொண்டிருக்கின்ற முக்கிய விடயங்களாக காணப்படுகின்றன. அதனை சமாளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அதனையடுத்து கருத்துத் தெரிவித்த மக்ரோன், ”எனது குழுவினருடன் இங்கு உங்களை சந்திக்க கிடைத்தமை மகிழ்ச்சியாக உள்ளது. எமது இரு நாடுகளுக்கும் இடையே காணப்படுகின்ற பல பொதுவான பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக நாம் இங்கு கூடியுள்ளோம்.
பயங்கரவாதம், பாதுகாப்பு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் நிலைமை என்பவற்றை நாம் சரிசெய்ய வேண்டியுள்ளது. இவ்விடயங்கள் தொடர்பாக நாம் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.
இதேவேளை, எதிர்வரும் நவம்பவர் மாதம் மீண்டும் உங்களை பரிஸில் வரவேற்க மகிழ்ச்சியுடன் தயாராகவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.