பயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்புநிலை – ஜனாதிபதி
In ஆசிரியர் தெரிவு April 23, 2019 5:41 pm GMT 0 Comments 2306 by : Litharsan
பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டி விரைவில் இயல்பு நிலையை மீளக்கொண்டுவர முடியுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்ட இலங்கையில் உள்ள தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், ஐ.நா. மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் வதிவிடப் பிரதிநிதிகள், ஏனைய சர்வதேச முகவர் அமைப்புக்களின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.
இக்கொடூரமான செயலுக்கு பொறுப்பான குற்றவாளிகளையும் அதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியவர்களையும் கண்டறிந்து கைது செய்வதற்கு பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பயங்கரவாதத்தை விரைவில் ஒழித்துக்கட்ட முடியுமென்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அனுபவம்வாய்ந்த, உயர் தொழிநுட்ப மற்றும் புலனாய்வு திறன்களைக் கொண்ட 8 நாடுகள் இலங்கைக்கு உதவுவதற்கு ஏற்கனவே உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட ஏனைய நாடுகளும் உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு முடியுமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் ஏனைய பிரதிநிதிகளும் ஜனாதிபதியிடம் இதன்போது உறுதியளித்தனர்.
ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், ஜேர்மனி, ஐக்கிய அமெரிக்கா, டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உள்ளிட்டோர் இதன்போது தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
30 வருடங்களாக இடம்பெற்ற போரின்போதும் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வின்போதும் இலங்கை புலனாய்வுத்துறை பெற்றுக்கொண்ட அனுபவங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பயன்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த துன்பியல் நிகழ்வு குறித்த இலங்கைக்கு தமது அனுதாபங்களை தெரிவித்த வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.