பயங்கரவாத தடைச் சட்டத்தின் அவசியம் குறித்து பிரதமர் விளக்கம்
In இலங்கை May 8, 2019 9:05 am GMT 0 Comments 2047 by : Dhackshala
பயங்கரவாத தாக்குதல்களில் மூலம் எம் முன்னால் பாரிய சவால் உள்ளதாகவும் அதனை எதிர்கொள்ளவே புதிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கொண்டு வர முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து நான் தொடர்ச்சியாக மக்களுக்கு தெளிவூட்டல்களை வழங்கிவந்துள்ளேன். இதுதொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நேற்று நாடாளுமன்றில் கருத்துரைத்துள்ளார்.
நேற்று நான் ஆற்றிய உரையின்போதும், இதன் பின்னணியில் உள்ள சர்வதேச பயங்கரவாதம் குறித்து விரிவாக கூறியிருந்தேன்.
இன்று நாம் சாதாரண ஒரு கொரில்லாத் தாக்குதலுக்கு முகம்கொடுக்கவில்லை. மாறாக, பாரிய சவாலே இன்று எம் முன்னால் உள்ளது. இதனாலேயே, புதிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கொண்டுவர நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
எனினும், இதனை நடைமுறைப்படுத்த சில தடைகள் ஏற்பட்டன. கடந்த காலங்களில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்கள், அரசியல் சூழ்ச்சியால் இதனை கொண்டுவர எம்மால் முடியாது போய்விட்டது.
தற்போது இதனை சிலர் எதிர்த்து வருகிறார்கள். இது பயங்கரவாதத்தை கட்டப்படுத்தாது என்றும் அவர்களுக்கு சலுகைகளை வழங்கும் என்றும் கூறுகிறார்கள். நான், அவர்களிடம் இந்த சட்டத்தில் அவ்வாறான சரத்து எங்கு உள்ளது என்று கேட்க விரும்புகிறேன்.
இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இவ்வாறானதொரு சட்டமே இருக்கிறது. இந்த சட்டத்தில் மக்களையோ அரசுக்கோ அச்சுறுத்தல் விடுப்பதுகூட குற்றமாகத்தான் கருதப்படுகிறது. இப்படியிருக்கும்போது, ஏன் இதனை எதிர்க்க வேண்டும்? இதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.