பயங்கரவாத தாக்குதலின் அதிர்வுகள் – களையிழந்தது சீயோன் தேவாலயம்
In இலங்கை May 8, 2019 11:21 am GMT 0 Comments 2353 by : Dhackshala
இலங்கையின் பல பகுதிகளில் கடந்த மாதம் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர். 500 பேர் வரையில் காயமடைந்திருந்தனர்.
குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் (புதன்கிழமை) 17 நாட்கள் கடந்துவிட்டன. இலங்கை ஓரளவு வழமைக்குத் திரும்பியுள்ள போதிலும், பாதிப்படைந்த மக்களும் பாதிக்கப்பட்ட தேவாலயங்களும் வலிகளின் ரணத்திலிருந்து இன்னும் மீளவில்லை.
இதற்கு மட்டக்களப்பு சீயோன் தேவாலயமும் விதிவிலக்கல்ல. கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் சீயோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் சுமார் 30 பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர். இந்தத் தாக்குதல் 14 சிறுவர்களின் உயிர்களையும் காவுகொண்டிருந்தது.
இந்நிலையில் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 17 நாட்கள் கடந்த நிலையில் சீயோன் தேவாலயத்தின் தற்போதைய நிலை குறித்து அறிய ஆதவன் செய்திப் பிரிவு மட்டக்களப்பிற்கு பயணித்தது.
30 வருட யுத்தத்திலிருந்து மீண்டெழுந்த மக்கள் மீண்டும் அச்சத்துடன் வாழும் சூழ்நிலையை தற்போது அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே மக்கள் வாழ்கின்றனர்.
சீயோன் தேவாலயம் படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் வெறிச்சோடி காணப்பட்டமை எமது கமராவில் பதிவாகியது. அத்தோடு குண்டுத்தாக்குதல்களின் எச்சங்களும் ஆங்காங்கே காணப்பட்டன. 17 நாட்கள் ஆகிய போதிலும் தற்போது வரையில் தேவாலயம் மூடியே காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.