பயங்கரவாத தாக்குதல்களுக்காக இணையத்தின் ஊடாக பணப்பரிமாற்றம் – நாளுக்கு நாள் வெளியாகும் புதுத்தகவல்கள்!
In ஆசிரியர் தெரிவு May 6, 2019 6:56 am GMT 0 Comments 4579 by : Benitlas
இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களுக்கான பணப்பரிமாற்றம் இணையத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Whitestream புலனாய்வு நிறுவனம் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தற்கொலை குண்டுதாரிகளினால் நடத்தப்பட்ட தாக்குதலில் 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.
இந்த தாக்குதல்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் மட்டுமல்லாது நட்சத்திர விடுதிகளிலும் நடத்தப்பட்டது. இதன்போது இலங்கை மக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவர்களும் உயிரிழந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதிகளவான ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தினரின் சீருடைக்கு ஒப்பான சீருடைகளும் அதிகளவில் மீட்கப்பட்டு வருகின்றன.
அதேபோன்று காத்தான்குடி குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் சஹரான் ஹாஷிமின் மனைவியிடம் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில், தினந்தோறும் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்தநிலையிலேயே தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களுக்கான பணப்பரிமாற்றம் இணையத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக Whitestream புலனாய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
விசேடமாக, Bit Coin போன்ற சர்வதேச நிதிப்பிரிவுகளைப் பயன்படுத்தியே, இந்தப் பணப்பறிமாற்றம் கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
Coin Payment நிறுவனங்களோடு இணைந்த Bit Coin address பல, இஸ்லாமிய அரசு எனும் ஐ.எஸ் அமைப்புக்குச் சொந்தமாக இருப்பதாகவும் Whitestream புலனாய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு முதல் நாள், இந்த Bit Coin address ஊடாக 9,800 அமெரிக்க டொலர்களிலான Bit Coin கொடுக்கல் வாங்கல்கள் இரண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறித்த புலனாய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று நேற்றுடன் இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில் நாளுக்கு நாள் இவ்வாறான புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக தீவிரவாத தாக்குதலுக்கு முன்னர் சஹரான் ஹாஷிம் என்ற பயங்கரவாதியின் கீழ் செயற்பட்ட குழுவினர் பயிற்சி பெற்றதாக நம்பப்படும் இடம் நேற்றைய தினம் பாதுகாப்பு படையினரால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது.
இதன்போது எவரும் கைது செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது. இங்கிருந்தே தீவிரவாத தாக்குதலுக்கு முன்னர் சஹரான் ஹாஷிம் என்ற பயங்கரவாதியின் கீழ் செயற்பட்ட குழுவினர் தங்களது செயற்பாடுகளை முன்னெடுத்து வந்ததாகவும் நம்பப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.