பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து சவுதி அரேபியாவும் இலங்கையை எச்சரித்துள்ளது?
In ஆசிரியர் தெரிவு May 5, 2019 3:16 am GMT 0 Comments 2590 by : Dhackshala

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்தான எச்சரிக்கை கடிதமொன்றை சவுதி அரேபியாவும் இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு 5 நாட்களுக்கு முன்னர் சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சினால் இலங்கைக்கான சவுதி தூதரகத்திற்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் பின் அப்துல் ஹசீஸ் அல் அசாஃப் இனால் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் அப்துல் நாசர் அல் ஹரேதிக்கு குறித்த இரகசியக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லெபனானின் அல்-அஹெட் செய்தி இணையத்தளம் இந்த கடிதம் தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் முக்கிய மூன்று விடயங்கள் அந்த கடிதத்தில் உள்ளடக்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதரகத்தில் காணப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உறுப்பினர்கள், குழுக்கள் தொடர்பான ஆவணங்கள், கணினி தரவுகள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் அழிக்குமாறு குறித்த இரகசிய கடிதத்தில் முதலாவது விடயமாக குறிப்பிடப்பட்டிருந்ததாக அந்த செய்தி இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் மதஸ்தலங்கள் போன்ற இடங்களை எதிர்வரும் சில நாட்களுக்கு தவிர்க்குமாறும், விசேடமாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களுக்கு செல்லாதிருக்குமாறும் குறித்த கடிதத்தில் 2ஆவது விடயமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் அதிகாரிகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் எழுத்து மூலம் சவுதியின் வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்பி வைக்குமாறும் குறித்த கடிதத்தில் மூன்றாவது விடயமாகக் கூறப்பட்டுள்ளதாக குறித்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறான பின்புலத்தில் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் தமது நாட்டின் அனைத்துப் பிரஜைகளையும் இலங்கையில் இருந்து வெளியேறுமாறு சவுதி அரேபியத் தூதரகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.