பலஸ்தீன புராதன பள்ளிவாசல் களியாட்ட விடுதியாக மாற்றப்பட்டுள்ளதால் சர்ச்சை!

பலஸ்தீனத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிவாசல்களில் ஒன்று, இஸ்ரேலிய அதிகாரிகளால் இரவு களியாட்ட விடுதியாக மாற்றப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பலஸ்தீனத்தின் வடபிராந்திய நகரான சஃபாத்திலுள்ள அல் அஹ்மர் என்ற இப்பள்ளிவாசல் 13ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டதாகும்.
இந்தநிலையில் அல் அஹ்மர் எனும் பெயரை, கான் அல் அஹ்மர் என இஸ்ரேலிய அதிகாரிகள் மாற்றியுள்ளதாக பலஸ்தீனத்தின் ‘தி நியூஸ்’ இணையத்தளம் தெரிவித்துள்ளது.
குறித்த பள்ளிவாசல் 1223 முதல் 1277 ஆம் ஆண்டு வரையான காலத்தில் நிர்மாணிக்கப்பட்டது என சஃபாத் நகரைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரான கலாநிதி முஸ்தபா அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
அரிய வரலாறு மற்றும் தொல்பொருள் பெறுமானங்களைக் கொண்டது எனவும் கல்வ் நியூஸ் பத்திரிகையிடம் அவர் தெரிவித்துள்ளார்.
1948ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், மேற்படி பள்ளிவாசலை ‘அசுத்தப்படுத்துதற்கான’ பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக ‘தி நியூஸ்’ இணையத்தளம் தெரிவித்துள்ளது.
பல மாற்றங்களுக்குப் பின்னர் தற்போது இஸ்ரேலிய நிறுவனம் ஒன்றினால் இது இரவு விடுதியாக பயன்படுத்தப்படுவதாக பலஸ்தீன இஸ்லாமிய முன்னேற்ற முகவரகத்தின் செயலாளர் கைர் தாபரி தெரிவித்துள்ளார் என லண்டனைத் தளமாகக் கொண்ட அல் குத்ஸ் அல் அராபி பத்திரிகை தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.