பல்கலையில் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் இடம்பெறாது என்பதை உறுதிப்படுத்துக – யாழ். கட்டளைத் தளபதி
In ஆசிரியர் தெரிவு May 7, 2019 2:03 pm GMT 0 Comments 2910 by : Litharsan

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் எதிர்காலத்தில் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் இடம்பெறாது என்பதை உறுதிப்படுத்துமாறு யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கை முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்று. அதனை அறிந்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அலுவலகத்தில் இருந்தவற்றை அகற்றியிருக்க முடியாதா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையால் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய பீடாதிபதிகள் மற்றும் பதிவாளர் ஆகியோர் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியை இன்று (செவ்வாய்க்கிழமை) பலாலியில் சந்தித்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மற்றும் சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகியோரின் விடுதலை குறித்து இந்த சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது.
இதன்போது, நாட்டில் நிலவும் தற்போதய சூழ்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கையினை மீளவும் ஆரம்பிப்பதற்கு இராணுவத்தின் உதவி அவசியமானது என பீடாதிபதிகள் யாழ்ப்பாண மாவட்டத் தளபதியிடம் சுட்டிக்காட்டினர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாட்டின் அனைத்து பாகங்களையும் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதனால் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பினை கோருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், கடந்த 3ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றபோது சில விரும்பத்தகாத விடயங்கள் இடம்பெற்றதனை இராணுவத் தளபதியிடம் தெரிவித்த அவர்கள் அந்த விடயங்கள் தமக்கு மன வேதனையை அளிப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு அவர்கள் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் பீடாதிபதிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி, தனது அதிகார வரம்புக்கு உட்பட்ட விடயங்களை செய்து தருவதாக உறுதியளித்தார்.
அத்துடன், “யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மட்டுமல்லாது இலங்கையில் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் தேடுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோன்றதொரு தேடுதலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் மேற்கொள்ளப்பட்டது.
இந்தத் தேடுதல் நடவடிக்கை முன்னறிவுப்புடனேயே நடத்தப்பட்டது. ஆகவே அங்கு வைக்கப்பட்டிருந்த ஒளிப்படங்கள், பதாகைகளை அகற்றியிருக்க உங்களால் முடியவில்லையா?
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எதிர்காலத்தில் இவ்வாறான சட்டத்துக்குப் புறம்பான விடயங்கள் இடம்பெறாது என உறுதிப்படுத்தப்படவேண்டும்” என்றார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.