பல்கலை மாணவர்கள் மீதான வன்முறை: மோடி, அமித்ஷா விரும்பியது நடக்கிறது – சிவசேனா
In இந்தியா January 8, 2020 3:35 am GMT 0 Comments 1842 by : Dhackshala

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வன்முறை சம்பவத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் அமித்ஷாவும் விரும்பியது நடப்பதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.
மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை நினைவுபடுத்துகிறது என அக்கட்சியின் தலைவரும் மராட்டிய முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் பிரதமர் நரேந்திர மோடியையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் கடுமையாக சிவசேனா சாடியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது, “பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் என்ன விரும்பினார்களோ, அது நடக்கிறது.
நாடு ஆபத்தில் உள்ளது. பிரிவினைவாத அரசியல் நாட்டிற்கு ஆபத்தானது. மும்பையில் 2008ஆம் ஆண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் முகமூடி அணிந்து இருந்தனர்.
அதேபோலதான் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக தாக்குதலில் ஈடுபட்டவர்களும் மூகமுடி அணிந்து இருந்தார்கள்.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ரத்தக்கறையை அனுமதிப்பது, மாணவர்களை தாக்குவது போன்ற கொடூரமான அரசியலை இதற்கு முன்பு பார்த்தது இல்லை. மாணவர்கள் மீதான தாக்குதல் சட்டம், ஒழுங்கு நிலைமைக்கு ஏற்பட்ட கறை. இந்த தாக்குதலுக்கு எதிரான எழுச்சி நாடு முழுவதும் காணப்படுகிறது.
மாணவர்கள் மீதான வன்முறையை கண்டித்த பாரதிய ஜனதா, பல்கலைக்கழகங்கள் அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களில் வன்முறையையும் அரசியலையும் கொண்டுவந்தவர்கள் யார்? அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்கள் சித்தாந்தத்துடன் உடன்படாதவர்களை அழிக்கும் கொள்கையை யார் செயற்படுத்துகிறார்கள்?
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் இந்து – முஸ்லிம் கலவரத்தை பார்க்க பாரதிய ஜனதா விரும்பியது. ஆனால் அது நடக்கவில்லை. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் முஸ்லிம்கள் மட்டும் போராடவில்லை. இந்த புதிய சட்டதால் இந்துக்களும் பாதிக்கப்படுவார்கள்” என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.