பாதசாரியை மோதி விட்டு தப்பிச் சென்றவர் பொலிஸில் சரண்!

கல்லூரி வீதி மற்றும் ஸ்பெடினா அவனியூ பகுதியில், கடந்தவாரம் தடப் பேரூந்து தரிப்பிடம் ஒன்றில் நின்றுக்கொண்டிருந்த இளைஞனை மோதி, பாரதூரமான காயங்களுக்கு உள்ளாக்கிவிட்டுத் தப்பிச் சென்ற வாகனம் ஒன்றின் சாரதி, பொலிஸில் சரணடைந்துள்ளார்.
கடந்த 14ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில், எஸ்.யு.வி. ரக வாகனத்தினால் மோதப்பட்ட எஸாம் பாபு எனப்படும் 21 வயதான இளைஞன், தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், சம்பவம் இடம்பெற்ற வேளையில் அந்தப் பகுதியில் பலர் இருந்ததுடன், ஒளிப்பதிவு ஆதாரங்களும் கிடைத்த நிலையில், அவற்றினை வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் அந்த வாகனத்தின் உரிமையாளரை அடையாளம்கண்டு, அவரை பொலிஸ் நிலையத்தில் சரணடையுமாறு கேட்டுக்கொண்டனர்.
இதனையடுத்து பொலிஸில், சரணடைந்துள்ள 26 வயதான ஜுலியன் கிளார்க் என்பவர் மீது அபாயகரமாக வாகத்தைச் செலுத்திச் சென்று காயம் ஏற்படுத்தியமை, சம்பவ இடத்தில் தரித்திருக்காது தப்பிச் சென்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.
தற்போது அவரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பழைய நகரமண்டப நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.