பா.ஜ.க.வின் புதிய தலைவர் அறிவிப்பு நாளை – கட்சித் தரப்பில் வெளியான தகவல்

பா.ஜ.க.வின் புதிய தலைவராக செயல் தலைவர் ஜே.பி. நட்டா நாளை தெரிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ.க.வில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற முறை பின்பற்றப்பட்டு வருவதால், அமித் ஷா மத்திய அமைச்சர் பதவியை ஏற்ற நிலையில், கட்சியின் செயல் தலைவராக ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டார். இந்நிலையில் விரைவில் பா.ஜ.க.வின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, பா.ஜ.க.வின் அமைப்புத் தேர்தல் பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து தேசியத் தலைவர் தேர்தலும் நடைபெறும்.
இந்த சூழலில் நாளை (திங்கட்கிழமை) தேசியத் தலைவர் தேர்வு செய்யப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜே.பி. நட்டா தலைவர் என ஏறக்குறைய முடிவு செய்யப்பட்டு விட்டதால் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை என்றும் ஏகமனதாக அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக மத்திய அமைச்சர்கள் அனைவரையும் பா.ஜ.க. தலைமை அலுவலகத்துக்கு நாளை காலை வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தேசிய நிர்வாகிகளும் கலந்துகொள்ளும் கூட்டத்தில் ஜே.பி.நட்டா ஏகமனதாக தலைவராகத் தெரிவு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.