பிரதமரின் தீர்மானம் குறித்து முக்கிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டது இந்தியா!
2019ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கை செயற்படுமென எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் வௌிப்படுத்தப்பட்டதாகவும் நாட்டின் தலைமை அது தொடர்பில் அறிவித்திருந்ததாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து இதனை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கையின் அமைச்சரவை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தீர்மானித்திருந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அனைத்து தரப்பினரும் ஏற்கனவே ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாட்டின் பிரகாரம் செயற்படவேண்டும் என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் பராமரிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்க கூட்டு மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் விசேட ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.