பிரதேச செயலாளரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் பதற்றம்
In ஆசிரியர் தெரிவு February 1, 2021 6:38 am GMT 0 Comments 1641 by : Yuganthini

வேலணை பிரதேச செயலாளர் எஸ்.சோதிநாதனின் இடமாற்றத்துக்கும் புதிய செயலாளர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச செயலக வாயிலை மூடி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வோம் என எச்சரித்ததால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
வேலணை பிரதேச செயலாளர் எஸ்.சோதிநாதனுக்கு, இன்று (திங்கட்கிழமை) நடைமுறைக்கு வரும் வகையில் வவுனியா- வெண்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளராக இடமாற்றம் வழங்கப்பட்டது.
மேலும் வவுனியா வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலாளர் எஸ்.சிவகரன், வேலணை பிரதேச செயலாளராக மாற்றப்பட்டார்.
இந்நிலையில் புதிய பிரதேச செயலாளர் இன்று காலை கடமைகளைப் பொறுப்பேற்கவிருந்த நிலையில், மக்கள் பிரதேச செயலக வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை அறிந்த பொலிஸார், இன்று முற்பகல் 10 மணியளவில் பேருந்து ஒன்றில் வந்து இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்வோம் எனவும் கலைந்து செல்லுமாறும் தெரிவித்தனர்.
அதனால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது. அத்துடன் புதிய பிரதேச செயலாளரை கடமையேற்கவைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.