பிரபாகரனின் செயற்பாடுகளில் இருந்து மஹிந்த அணியினர் கற்றுக்கொள்ள வேண்டும் – லக்ஷ்மன்
In ஆசிரியர் தெரிவு July 13, 2019 1:04 pm GMT 0 Comments 2239 by : Litharsan
மகிந்த அணியினர் பிரபாகரனின் செயற்பாடுகளின் மூலம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், நாடாளுமன்றத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறை தொடர்பாக, பிரபாகரனினதும், அவரைப் பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தபோது அவர்கள் செயற்பட்ட விதம் தொடர்பாகவும் மஹிந்த தரப்பு கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
நாவலப்பிட்டி பகுதியில் காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “2015ஆம் ஆண்டு இருந்த அரசாங்கத்திற்கு எதிராக 2012, 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையில் மூன்று பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. அந்த பிரேரணைகள் மூன்றையும் அரசாங்கம் செயற்படுத்தவில்லை.
அதற்கமைய 2015ஆம் ஆண்டு மீண்டும் அரசாங்கம் ஆட்சி அமைத்திருந்தால் அந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பொருளாதார தடை வந்திருக்கும்.
அதற்கு முகங்கொடுக்க முடியாமையால் இரண்டு வருடங்கள் எஞ்சியிருந்த நிலையில் அவசர அவசரமாக மஹிந்த தரப்பினர் தேர்தலுக்குச் சென்றனர். அவ்வாறு சென்றவர்கள், இன்று ஆட்சியைப் பிடிக்க முயல்கின்றனர். அது முடியாத காரியம். அதற்காக அவர்கள் பல போராட்டங்களையும் நடத்துகின்றனர்.
எதிர்க்கட்சியினருக்கு மீண்டும் ஆட்சி அதிகாரம் கிடைத்தால், அன்று நாடாளுமன்றத்தில் நடத்துகொண்டதைப் போன்று சண்டையிட்டு, சொத்துகளுக்கு சேதம் விளைவித்து, பௌத்த புனித நூல் (தம்மபதம்), பைபிள் ஆகியவற்றை வீசி ஏறிந்து கலகம் செய்ததைப் போன்றே அவர்களின் ஆட்சியும் அமையும்.
இவ்வாறு நாடாளுமன்றத்தில் இவர்கள் நடந்துகொண்டதைப் போன்று பிரபாகரனைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் நடந்துக்கொண்டதில்லை.
எனவே அவர்கள் போன்று மஹிந்த அணியினர் நடந்துக்கொள்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை கண்டிய மன்னர்களின் கொள்கையாகும். அதாவது சிறுபான்மை இனத்தையும் சமநிலையில் நடத்த வேண்டும் என்பதே எமது கொள்கையாகும்” என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.