பிரபாகரனின் தாய் பார்வதியம்மாளுக்கு இறுதிவரை சிகிச்சை வழங்கிய மருத்துவர் காலமானார்!
In இலங்கை October 8, 2018 6:10 am GMT 0 Comments 1403 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

உடல் நலம் குன்றிய நிலையில் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளை கவனித்துக் கொண்ட வல்வெட்டித்துறை மருத்துவர் மயிலேறும் பெருமாள் உடல் நலக்குறைவால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் ஈழப் போரின் பின்னர் மலேஷியா கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டார். ஆனால், அப்போதைய மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு அவரை திருப்பி அனுப்பியது.
இலங்கை கொண்டு செல்லப்பட்ட அவரை அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறை மருத்துவமனையில் வைத்து மருத்துவர் மயிலேறும் பெருமாள் கவனித்துக் கொண்டார்.
பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் பிறந்த மயிலேறும் பெருமாள். 1965 ஆம் ஆண்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று. 1972 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் பயிற்சி மருத்துவராக பணி செய்தவர்.
மிகத் திறமையான மருத்துவர் என்று பெயர் பெற்ற மயிலேறும் பெருமாளை பல்வேறு போராளிக்குழுக்களும் கடத்திச் சென்று காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்கி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காலமான மருத்துவர் மயிலேறும் பெருமாள் பூதவுடல் வல்வெட்டித்துறை சந்தியில் மக்கள் பார்வைக்கு அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று (திங்கட்கிழமை)பிற்பகல் அன்னாரின் பருத்தித்துறையில் அமைந்துள்ள வீட்டில் இறுதிக் கிரியைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து வல்வை ஊறணி இந்து மயானத்தில் தகனக் கிரியைகள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.