பிரபுக்கள் சபை லண்டனுக்கு வெளியே அமைக்கப்படலாம் : ஜேம்ஸ் கிளெவவர்லி
In இங்கிலாந்து January 20, 2020 12:22 pm GMT 0 Comments 2395 by : S.K.Guna

ஹவுஸ் ஒஃப் லோர்ட்ஸ் என்றழைக்கப்படும் பிரபுக்கள் சபையை லண்டனுக்கு வெளியே நகர்த்தலாமா என்று அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாக கென்சர்வேற்றிவ் கட்சியின் இணைத் தலைவர் ஜேம்ஸ் கிளெவவர்லி (James Cleverly) தெரிவித்துள்ளார்.
ஜேம்ஸ் கிளெவவர்லி ஸ்கை நியூஸிடம் தெரிவிக்கையில்; தலைநகருக்கு வெளியே உள்ள வாக்காளர்களுடன் அரசியலை மீண்டும் இணைக்கும் பலவிதமான விருப்பங்களில் இந்த யோசனையும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளதன்படி, யோர்க் அல்லது பேர்மிங்கம் நகரத்தில் மேல் அவையை (பிரபுக்கள் சபை) கொண்டு செல்வதற்கு விருப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆனால் தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் நாடியா விற்றோம் (Nadia Whittome) இந்தக் கருத்தை மேலோட்டமானது என்று விவரித்துள்ளார்.
பத்திரிகைகளில் வெளியான செய்திகளின்படி, வரும் வசந்த காலத்தில் தொடங்கப்படும் அரசியலமைப்பு மீளாய்வின் ஒரு பகுதியாக மேல் அவையை இடமாற்றம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
யோர்க் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பயன்படுத்தப்படாத நிலம் உள்ளதாகவும் அங்கு பிரபுக்கள் சபையை நிறுவமுடியும் என்று கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டில் வெஸ்ற்மின்ஸ்ரர் அரண்மனையில் தொடங்கவிருக்கும் புதுப்பித்தல் திட்டங்களின் ஒரு பகுதியாக ஹவுஸ் ஒஃப் லோர்ட்ஸை ஏற்கனவே தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றவேண்டிய தேவையுள்ளது.
வெஸ்ற்மின்ஸ்ரரில் உள்ள அரசுக்கு சொந்தமான ராணி எலிசபெத் II மாநாட்டு நிலையத்திற்கு ஹவுஸ் ஒஃப் லோர்ட்ஸ் செல்லவேண்டும் என்று பாராளுமன்றக் குழு ஒன்று முன்பு பரிந்துரைத்தது.
இந்த இடம் சுகாதார அமைச்சின் முன்னாள் இல்லமான ரிச்மண்ட் ஹவுஸிலிருந்து ஒரு குறுகிய நடைதூரம் என்பதால் பாராளுமன்றத்திற்கான ஒரு தற்காலிக இல்லமாக முன்மொழியப்பட்டிருந்தது.
நன்றி bbc.co.uk
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.