பிரான்ஸில் காணாமல்போன இளைஞர்கள்: கண்டுப்பிடிக்க உதவுமாறு அரசாங்கத்தை கோரும் உறவுகள்
In இலங்கை December 14, 2020 8:35 am GMT 0 Comments 1923 by : Yuganthini

வவுனியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இளைஞர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், குறித்த இளைஞர்களை கண்டுப்பிடிப்பதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தங்களுக்கு உதவ வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வவுனியா- கோதண்டர் நொச்சிகுளம் மற்றும் குருமன்காடு பகுதிகளை சேர்ந்த இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
குறித்த இளைஞர்கள் கடந்த இரண்டு வருடங்களிற்கு முன்னர் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக முகவர் ஒருவரூடாக இலங்கையில் இருந்து பயணித்துள்ளனர்.
இந்நிலையில் ஆபிரிக்காவின் பல்வேறு நாடுகளில் அவர்கள் தங்கியிருந்த நிலையில், வவுனியாவிலுள்ள அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பினை ஏற்ப்படுத்தி கதைத்து வந்துள்ளனர்.
அதாவது, கோதண்டர் நொச்சிகுளத்தை சேர்ந்த மகேந்திரன் கவிஞன் (வயது 23) என்ற இளைஞர் இறுதியாக இம்மாதம் 3 ஆம் திகதி தனது குடும்பத்தினருடன், கதைத்துள்ளார். அதன் பின்னர் அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று வவுனியா- குருமன்காட்டை சேர்ந்த பிரசன்னா (வயது27) என்ற இளைஞரது தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த வாரமளவில் மோரோக்கோவில் இருந்து ஸ்பெயின் நோக்கி பயணிகளை ஏற்றிசென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியதில் சிலர் உயிரிழந்ததாக, அந்த படகில் பயணித்து தப்பிய இளைஞர் ஒருவர், காணாமல்போன இளைஞனின் உறவினர் ஒருவருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த படகில் வவுனியாவில் இருந்து பயணித்த சிலரும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாகவும் வவுனியாவிலுள்ள இரு இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.