பிரித்தானியாவிடம் மன்னிப்புக் கோரிய அமெரிக்க கொவிட்-19 தடுப்புக் குழு தலைவர்!

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் விவகாரத்தில் பிரித்தானியா அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டதாகக் கூறியதற்கு அமெரிக்க கொரோனா தடுப்புக் குழு தலைவர் அந்தோணி ஃபாசி மன்னிப்புக் கோரியுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க கொரோனா தடுப்புக் குழு தலைவர் அந்தோணி ஃபாசி கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் நான் கூறிய கருத்துகளை வைத்து, பிரித்தானியா அதிகாரிகளின் செயற்பாட்டை நான் விமர்சிப்பதாக தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. உண்மையில், பிரித்தானியாவின் சுகாதாரத் துறை அதிகாரிகள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
உண்மையில், மருந்துகளுக்கு அங்கீகாரம் அளிப்பதில் பிரித்தானியா கையாளும் நடைமுறைகளுக்கும் அமெரிக்கா கையாளும் நடைமுறைக்கும் இடையே வேறுபாடு உள்ளது. பிரித்தானியாவைவிட அமெரிக்காவில் மருந்துகளுக்கு அங்கீகாரம் கிடைக்க அதிக காலம் பிடிக்கும் என்பதைத்தான் நான் தெரிவித்தேன்’ என கூறினார்.
ஃபைஸர்-பயான்டெக் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசிக்குக்கு பொதுப் பயன்பாட்டு அங்கீகாரத்தை பிரித்தானியாவின் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு முதல் முறையாக அங்கீகாரம் அளித்துள்ளது.
மிகவும் கவனமாக ஆய்வுகள் செய்த பிறகே இந்த அங்கீகாரத்தை வழங்கியதாக அந்த அமைப்பு தெரிவித்தது.
எனினும், ஃபைஸரின் கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு, செயற்திறன் குறித்து அந்தோணி ஃபாசி சந்தேகம் எழுப்பினார்.
அந்தத் தடுப்பூசியின் தரம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு செய்யும் அளவுக்கு பிரித்தானியா அதிகாரிகள் செய்யவில்லை என்றும் அவர் விமர்சித்திருந்தார். ஃபைஸர் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கும் விவகாரத்தில் பிரித்தானியா அவரச முடிவை எடுத்துள்ளதாகவும் அந்தோணி ஃபாசி கூறினார்.
இன்னும் சில தினங்களுக்குப் பிறகு பிரித்தானியா முழுவதும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அந்த நாட்டு பொது சுகாதரத் துறை ஆயத்தமாகி வருகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.