பிரித்தானியா தமது காலநிலை இலக்கை வலுப்படுத்தவேண்டும்: அரசாங்க ஆலோசகர்கள்
In இங்கிலாந்து May 2, 2019 11:25 am GMT 0 Comments 2107 by : shiyani

2050 ஆம் ஆண்டுக்குள் பசுமையில்ல வாயு உமிழ்வுகளை நிகர பூச்சியமாக குறைப்பதற்கான உறுதிப்பாட்டை எடுப்பதன் மூலமாக பிரித்தானியா தமது காலநிலை இலக்கை வலுப்படுத்தவேண்டும் என காலநிலை மாற்றம் தொடர்பான அரசாங்க ஆலோசகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பசுமையில்ல வாயுக்களை 100 சதவிகிதம் இல்லாதொழிப்பதற்கான சட்டபூர்வ இலக்கொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் உமிழ்வுகளை குறைப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இந்த ஆலோசகர்கள்குழு அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
காலநிலை மாற்றத்துக்கு எதிராக கடந்த சிலவாரங்களாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களையடுத்து இக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த பரிந்துரைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
2050 ஆம் ஆண்டுக்குள் பசுமையில்ல வாயு உமிழ்வை பூச்சியமாக குறைப்பதற்கான புதிய இலக்கொன்றை அமைப்பதன் மூலம் உலகளாவிய வெப்பமயமாதலில் தனது பங்களிப்பை பிரித்தானியா முடிவுக்கு கொண்டுவர முடியுமென இக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்மிடம் ஏற்கனவே இருக்கும் தொழில்நுட்பம் மூலம் இந்தப் புதியஇலக்கை அடைவது சாத்தியப்படும் ஆனாலும் அரசாங்கம் காலநிலை கொள்கைகளை ஒழுங்குபடுத்தினால் மட்டுமே உறுதியாக இந்த இலக்கை அடைய முடியுமெனவும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரம்பரிய எரிவாயு கொதிகலன்கள் மூலமாக வீடுகளை வெப்பப்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவருதல், கூடுதலான பசுமை மின்சார உபயோகம், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை அகற்றி மின்சார வாகன உபயோகம், கூடுதலான நடைப்பயிற்சி மற்றும் துவிச்சக்கரவண்டி உபயோகம், இறைச்சி மற்றும் பால் பொருட்களின் நுகர்வை குறைத்தல், விமானப் பயணங்களை குறைத்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலமாக நிகர பூச்சிய இலக்கை அடைய முடியும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.