பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த கூட்டமைப்பு – பிரேரணையை வெற்றிகொள்வது குறித்து ஆராய்வு
In இலங்கை February 23, 2021 3:45 am GMT 0 Comments 1273 by : Dhackshala

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா கொண்டுவரும் பிரேரணையை வெற்றிகொள்வதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் இது குறித்து பேரவையின் உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதாகவும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹுல்டன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் பிரித்தானியா முன்னெடுக்கும் நகர்வுகளுக்கு பூரண ஒத்துழைப்புக்களை கூட்டமைப்பு எப்போதும் வழங்கும் எனவும் பிரித்தானியாவின் மேற்பார்வை கண்டிப்பாக இருக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அவரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோர் கொழும்பில் நேற்று சந்தித்துள்ளனர்.
இதன்போது குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள சிறிதரன், இம்முறை இலங்கை விடயத்தில் பிரித்தானியா கொண்டுவரும் பிரேரணையை ஏகமனதாக நிறைவேற்றிக்கொள்ள பிரித்தானியா நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொறுப்புக்கூறல் விடயங்களில் பாதிக்கப்பட்ட தரப்புடன் தாம் எப்போதும் இருப்பதாக சாரா தம்மிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “எமது மக்கள் இன்றும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுக்கொண்டுள்ளனர். அவர்களுக்கான நியாயங்களை பெற்றுக்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் எமது மக்களிடமே எழுந்துள்ளது. எனவே நாம் மக்களுக்காக செய்ய வேண்டிய கடமைகளை முழுமையாக செய்து முடிக்க தயாராக உள்ளோம் என்பதையும் வலியுறுத்தியுள்ளோம்.
பிரித்தானியா இப்போது பிரேரணை ஒன்றினை கொண்டுவந்தாலும் அதனை நிறைவேற்றுவதில் சவால்கள் உள்ளதையும் அவர் தெளிவுபடுத்தினார். எனவே உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பிரேரணையை வெற்றிகொள்வதில் நாம் உறுதியாக இருக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.