பிரித்தானிய பிரஜைகள் தவிர ஏனைய நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கைக்கு வர அனுமதி
In இலங்கை January 12, 2021 4:50 am GMT 0 Comments 1722 by : Dhackshala
பிரித்தானியா பிரஜைகளை தவிர ஏனைய நாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் கொரோனா வைரஸ் தாக்கம் பரவலடையாது என்றும் உக்ரைன் நாட்டு பயணிகள் நாட்டுக்கு வருவதை தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தாக்கம் எப்போது முடிவுக்கு கொண்டுவரப்படும் என குறிப்பிட முடியாது என்றும் எனவே கொரோனா தாக்கத்தினால் எழுந்துள்ள சவால்களை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு மத்தியில் வெற்றிக்கொள்ளவேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்ட செயலக பிரிவில் இடம்பெற்ற நகர அபிவிருத்தி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “பிரித்தானிய நாட்டு பிரஜைகள் நாட்டுக்குள் வருவதற்கு மாத்திரமே தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய நாட்டவர்கள் இலங்கைக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளலாம்.
உக்ரைன் நாட்டவர் மாத்திரமல்ல ஏனைய நாட்டவர்களுக்கும் இலங்கைக்கு சுற்றுலா பிரயாணங்களை மேற்கொள்வதை தடுக்கும் தீர்மானத்தை சுகாதார தரப்பினரும் கொவிட்-19 வைரஸ் தொடர்பான தொழில்னுட்ப குழுவினரும் மாத்திரமே எடுப்பார்கள்.
பிரித்தானிய நாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் நாட்டுக்குள் வருவதற்கு மாத்திரம் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னர் வணிக விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும். சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த புதிய சுகாதார திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம், சர்வதேச விமான சேவைகள் அமைப்பு ஆகிய அமைப்புக்களின் பரிந்துரைகளுக்கு அமையவே சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்குள் வரும் சுற்றுலாப் பிரயாணிகள் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதனை சுற்றுலா சேவை முகவர்களுக்கு தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். சுற்றுலாப் பிரயாணிகளை அழைத்து வரும் செயற்திட்டம் தொடர்ந்து அவதானிக்கப்படுகிறது” என மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.