பிரெக்ஸிற்றை நிறைவேற்ற ஒத்துழையுங்கள்: பிரதமர் மே
In இங்கிலாந்து May 5, 2019 3:39 am GMT 0 Comments 2489 by : Varshini

கட்சிகளுக்கிடையில் காணப்படும் வேற்றுமைகளை ஒருபுறம் வைத்துவிட்டு, பிரெக்ஸிற்றை நிறைவேற்ற ஒத்துழைக்குமாறு தொழிற்கட்சியிடம் பிரதமர் தெரேசா மே கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றில் ஒப்புதல் பெற முடியவில்லை. மூன்று தடவைகள் அதன் முன்மொழிவுகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஒக்டோபர் 31ஆம் திகதிவரை அதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பினுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது அவசியமென குறிப்பிட்டுள்ள பிரதமர், மக்கள் ஏற்கனவே வழங்கிய ஆணையின் பிரகாரம் பிரெக்ஸிற்றை நிறைவேற்றுவது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் ஆளும் கொன்சர்வேற்றிவ் கட்சி பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. பிரெக்ஸிற் முட்டுக்கட்டைகளே இந்த பின்னடைவுகளுக்கு காரணம் என பிரதமர் தெரேசா மே சாடியுள்ளார்.
பிரெக்ஸிற் உடன்பாட்டை எட்டுவதற்கு தொழிற்கட்சியுடன் ஏற்கனவே பிரதமர் மே பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை மறுதினம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.