பிரெக்ஸிற் ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கையெழுத்திட்டனர்
In இங்கிலாந்து January 24, 2020 10:43 am GMT 0 Comments 4592 by : S.K.Guna
ஜனவரி 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா பொன் டேர் லயன் மற்றும் ஐரோப்பியக் கவுன்சில் தலைவர் சார்ள்ஸ் மிஷேல் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதன் மூலம் 46 ஆண்டு கால ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவம் முடிவடைகின்றது.
இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நேற்று வியாழக்கிழமை பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு ராணி அனுமதி அளித்துள்ளார். எதிர்வரும் புதன்கிழமை ஐரோப்பிய நாடாளுமன்றமும் இந்த ஒப்பந்தத்துக்கு வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2021 இல் இருந்து பிரித்தானியாவுடன் ஐரோப்பிய ஒன்றிய எதிர்கால உறவுகள் குறித்த ஒப்பந்தத்தை நோக்கமாகக் கொண்டு இந்த ஆண்டு இறுதி வரை ஐரோப்பிய ஒன்றிய விதிகளைப் பின்பற்ற பிரித்தானியா சம்மதித்துள்ளது.
2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் எதிர்கால உறவுகள் குறித்து ஒரு விரிவான ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்தும் பிரித்தானியா அரசாங்கத்தின் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய மூத்த தலைவர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். ஏனெனில் அதற்கான கால அட்டவணை மிகவும் இறுக்கமானது என்று அவர்கள் கருதுகின்றனர்.
ஆனால் பிரதமர் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இந்த விடயத்தில் மிகவும் உறுதியாக உள்ளார். இப்பேச்சுக்கள் மூலம் பல ஆண்டுகளாக நிலவிய பிரெக்ஸிற் சிக்கல்களை நீக்கி பிரித்தானியா முன்னேற முடியும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்கும் முன்னாள் பெல்ஜியப் பிரதமர் சார்ள்ஸ் மிஷேல் பிரித்தானியாவுடன் எங்கள் நட்பு நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாம் பங்காளிகளாக ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி bbc.co.uk
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.