பிரெக்ஸிற்: குடிமக்களின் உரிமைகளுக்கான உத்தரவாதத்தை கோருகிறது பிரித்தானியா!
In இங்கிலாந்து April 30, 2019 9:26 am GMT 0 Comments 3240 by : shiyani

ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளில் வாழும் பிரித்தானியர்களின் உரிமைகளுக்கான உத்தரவாதத்துக்கான கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரித்தானிய அரசாங்கம் முன்வைக்கவுள்ளது.
எந்தவொரு சூழ்நிலையிலும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளில் வாழும் பிரித்தானியர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான உத்தரவாதத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கொன்சர்வேற்றிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அல்பேர்ட் கோஸ்டா மற்றும் பிரசார குழுக்களினால் பிரெக்ஸிற் செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய 27 அங்கத்துவ நாடுகளில் ஏறத்தாழ 1.3 மில்லியன் பிரித்தானியர்களும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த 3.2 மில்லியன் மக்கள் பிரித்தானியாவிலும் வாழ்கிறார்கள்.
அனைத்து பிரெக்ஸிற் சூழ்நிலைகளிலும் பிரித்தானியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான திட்டம் கடந்த பெப்ரவரி மாதம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றது. ஆனாலும் ஐரோப்பிய ஒன்றியம் இத்திட்டத்துக்கு மறுப்பு தெரிவித்திருந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தமே பிரித்தானியர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான சிறந்த வழியெனவும் சிறியதிட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தமுடியாதெனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை பிரெக்ஸிற் பேச்சுவார்த்தையாளர் மைக்கேல் பார்னியரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைப்பதற்கு பிரெக்ஸிற் செயலாளர் ஸ்டீபன் பார்க்லே உறுதியளித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.