UPDATE பிலிப்பைன்ஸில் இரட்டை குண்டுவெடிப்பு – 14 பேர் உயிரிழப்பு

UPDATE 02 பிலிப்பைன்ஸில் மேற்கொள்ளப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு குறித்த குண்டு வெடிப்புக்களில் மேலும் 75 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
UPDATE 01 தெற்கு பிலிப்பைன்ஸ் நகரமான ஜோலோவில் பெண் தற்கொலை குண்டுதாரி நடத்தியதாக கூறப்படும் இரட்டை குண்டுவெடிப்பில் இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு தாக்குதல்களிலும் குறைந்தது 17 அரசாங்க துருப்புக்கள் காயமடைந்தனர்.
முதல் குண்டுவெடிப்பு மணிலாவிற்கு தெற்கே 1,000 கிலோமீட்டர் (621 மைல்) தொலைவில் சுலு மாகாணத்தின் ஜோலோ நகரில் உள்ள வணிக கட்டடத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ டிரக்கை குறிவைத்து நிகழ்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கத்தோலிக்க தேவாலயத்தை குறிவைத்து மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.
குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் அமைந்துள்ள செஞ்சிலுவை சங்கத் தலைவர் ரிச்சர்ட் கார்டன் இதுகுறித்து விபரிக்கையில்,
‘மேம்பட்ட வெடிமருந்து சாதனத்துடன் ஏற்றப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள் ஒரு இராணுவ டிரக் அருகே சென்றது. முதல் வெடிப்பில் ஐந்து வீரர்கள் மற்றும் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்’ என கூறினார்.
மோட்டார் சைக்கிளில் இருந்த வெடிப்பொருட்கள், வீட்டில் தயாரிக்கப்பட்டவை என்று ஆரம்ப இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வெடிப்பில் உணவு மற்றும் கணினி கடை மற்றும் இரண்டு இராணுவ லொரிகள் சேதமடைந்ததாக இராணுவ செய்தித் தொடர்பாளர் ரெக்ஸ் பயோட் மற்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், இந்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. பிலிப்பைன்ஸில் மிகவும் வன்முறையான பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான அபு சயாஃப் குழுவின் கோட்டையாக ஜோலோ விளங்குகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.