பிளாஸ்டிக் பாவனையாளர்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்!
சுற்றுச் சூழலை பிளாஸ்டிக் பாவனையிலிருந்து மீட்கும் போராட்டம் உலகளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பெரும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொண்டபோதும், பிளாஸ்டிக் பாவனை தொடர்பாக இந்தோனேஷியா உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குகின்றது.
அங்கு இரண்டாவது மிகப் பெரிய துறைமுக நகரமான சுரபயாவில் ஒரு புதிய வழியில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் சேகரிப்பு வழிமுறையொன்று கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
பிளாஸ்டிக் மறு சுழற்சியை ஊக்குவிக்கும் வகையில் அவற்றை சேகரித்து ஒன்றுசேர்க்கும் விதமாக இலவச பேருந்து பயண அனுமதி சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
இந்த நடைமுறை கடந்த ஏப்ரல் மாதம் சுரபயா நிர்வாகத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பயனர்கள் ‘ரெட் சிற்றி பஸ்’ஸில் பிளாஸ்டிக் பொருட்களை கையளித்துவிட்டு பயணிக்க முடியும்.
பிளாஸ்டிக் குவளைகள் மற்றும் போத்தல்களை இதற்காக பெரும்பாலும் பயன்படுத்த முடியும். இரண்டு மணித்தியால பயணத்திற்கான கட்டண சீட்டுக்கு ஈடாக 10 பிளாஸ்டிக் குவளைகள் அல்லது 5 போத்தல்களை கையளிக்க முடியும்.
அவற்றின் அளவைப் பொருத்து இந்த பெறுமதி அமையும். எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற நகரத்தை உருவாக்கும் தீவிரமான நோக்கில் இந்த நடைமுறை தற்போது அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இதுகுறித்து சுரபயாவைச் சேர்ந்த பெண்ணான லின்டா ரஹ்மவதி கூறுகையில், “பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பயனற்ற பொருட்கள் போன்றவை, என் இருப்பிடத்திற்கு அருகில் இருந்தன. அவற்றை நான் இங்கு கொண்டு வந்தேன்.
சுற்றுச் சூழல் தூய்மையாக இல்லை என்பதை அறிவேன். ஆனால் இந்த குப்பைகளை சேகரிப்பவர்களுக்கு உள்ள பணிச்சுமையை சிறிதேனும் குறைக்கும் என்பது உறுதி” என்று குறிப்பிட்டார்.
சுரபயாவில் நாளாந்தம் சேரும் குப்பைகளில் 15 சதவீதம் அல்லது 400 கழிவுகள் பிளாஸ்டிக் பொருட்களாகவே இருக்கின்றன என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பேருந்து ஒன்று ஒருநாளைக்கு 250 கிலோகிராம் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிப்பதுடன், மாதாந்தம் 7.5 டன்கள் இந்த திட்டத்தின் ஊடாக சேகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவை சேகரிக்கப்பட்ட பின்னர் போத்தல்களில் உள்ள பெயர் அடையாள தாள்கள் மற்றும் மூடிகள் என்பன ஏலத்தின் மூலம் மறுசுழற்சிக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.