புதிய இராணுவ அமைச்சராக ஆபிரிக்க அமெரிக்கர் ஒருவரையே தேர்வு செய்ய வேண்டும்: பிடனுக்கு அழுத்தம்

புதிய இராணுவ அமைச்சரை நியமிக்கும் விவகாரத்தில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வுசெய்யப்பட்டுள்ள ஜோ பிடனுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.
அடுத்த மாதம் பதவியேற்கவுள்ள ஜோ பிடன், தனது அமைச்சரவையில் இடம் பெறப்போகிறவர்களை இறுதி செய்வதில் தீவிராக உள்ளார்.
அவர் புதிய ராணுவ அமைச்சராக, அந்த துறையின் முன்னாள் துணை அமைச்சர் மிச்செலி புளூர்னாய் என்ற பெண் தலைவரை தேர்வு செய்ய விரும்புகிறார். ஆனால் இதற்கு அவரது சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஆபிரிக்க அமெரிக்கர் ஒருவரையே புதிய இராணுவ அமைச்சராக தேர்வு செய்ய வேண்டும் என்று கருப்பின தலைவர்கள், ஜோ பிடனுக்கு அழுத்தம் தந்து வருவதாக வொஷிங்டன் தகவல்கள் கூறுகின்றன.
மிச்செலி புளூர்னாயின் கடந்த கால வரலாறு, தனியார் துறையுடனான அவரது தொடர்புகளை சுட்டிக்காட்டி அவருக்கு எதிராக 7 முற்போக்கு குழுக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.
இவர்கள் தருகிற அழுத்தங்கள், ஜோ பிடனுக்கு தலைவலியாக மாறி உள்ளது. மேலும், முன்னாள் இராணுவ தளபதி லாயிட் ஆஸ்டின், பென்டகன் இராணுவ தலைமையகத்தின் மூத்த சட்டத்தரணி ஜே ஜோன்சன் உள்ளிட்டோரும் இராணுவ அமைச்சர் பதவியை பெறும் போட்டியில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.