புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க இலங்கை மறுப்பு!
In இலங்கை January 17, 2021 10:00 am GMT 0 Comments 1688 by : Yuganthini

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.
இதனால், இலங்கை குறித்த தீர்மானத்திற்கு பிரதான அனுசரணை வழங்கிய ஐந்து நாடுகளான கனடா, ஜேர்மனி, வட மசெடோனியா, மொன்டினீக்ரோ, பிரிட்டன் ஆகிய நாடுகள் புதிய தீர்மானத்தை கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் சமரச போக்கை வெளிப்படுத்துபவையாக அமையலாம் என சிவில் சமூக பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே, “ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், ஒருமித்த தீர்மானமொன்றை ஏற்றுக்கொள்வது கூட இலங்கைக்கு அரசியல் ரீதியில் சவாலான விடயமாக காணப்படலாம்.
மேலும், அவ்வாறான தீர்மானமொன்றை இலங்கை ஏற்றுக்கொண்டால் அது இலங்கை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை எதிர்க்கவில்லை என்ற கருத்தை உருவாக்கும்.
ஆகவே, இலங்கை தீர்மானமொன்றிற்கு இணை அனுசரணை வழங்குவது குறித்த கேள்விக்கே இடமில்லை. அத்தகைய தீர்மானமே அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. அது அரசமைப்பிற்கும் இறைமைக்கும் மக்களிற்கும் எதிராக காணப்பட்டது.
அத்துடன் கருத்தொருமைப்பாட்டுடனான தீர்மானம் என்பது கூட சாத்தியமா இல்லையா என்பதை என்னால் தெரிவிக்க முடியவில்லை. ஆனால் அரசியல் ரீதியில் இது ஒரு பெரும் சவாலாக காணப்படும்.
மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து வெளியேறியது குறித்த முடிவில் இலங்கை உறுதியாகவுள்ளது. கடந்த 2019 ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு, முன்னைய இணை அனுசரணை வழங்கப்பட்ட ஆணை குறித்து மறுபரிசீலனை செய்வதற்காக மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.