புதிய பிரதமரை ரணில் ஏற்றுக்கொண்டமையால் நீதிமன்றம் செல்லவில்லை: டிலான்
In ஆசிரியர் தெரிவு November 2, 2018 2:22 am GMT 0 Comments 1434 by : Yuganthini

“அரசியலமைப்புக்கு முரணாக ஜனாதிபதி செயற்பட்டிருந்தால் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தை நாடியிருக்கலாம். ஆனால் அவர் அதனை செய்யவில்லையென்றால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றுதானே அர்த்தம்?” என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
“முன்னாள் பிரதமர் ரணில் நீதிமன்றத்துக்கு செல்லாதன் வாயிலாக அவர் மஹிந்தவை பிரதமராக ஏற்றுக்கொண்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
மேலும் எந்ததொரு நாட்டிலும் அரசியலமைப்பு பல்வேறு மொழிகளில் அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் அரசியலமைப்பில் தெளிவின்மை மற்றும் காலத்தின் தேவைக்கேற்ப மாற்றம் செய்யப்படும். அம்முறையே எமது நாட்டிலும் பின்பற்றப்படுகின்றது.
அந்தவைகையில் ஜனாதிபதி, மஹிந்தவை தனக்கு நம்பிக்கையானவர் என்ற அடிப்படையிலேயே பிரதமராக நியமித்துள்ளார். இந்நியமனம் அரசியலமைப்புக்கு உட்பட்டவை ஆகும்.
ஆனால் ஜனாதிபதியின் நடவடிக்கையை அரசியலமைப்புக்கு முரணானதென ஒருசிலர் விவாதித்து வருகின்றரே ஒழிய, சட்டரீதியாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யவில்லை .
மேலும் ரணில் விக்ரமசிங்கவும் ஆங்கில பிரதியை வெளிநாட்டு அரசியல் தலைவர்களுக்கு காட்டிக்கொண்டு இருக்கின்றார். அவரும் நீதிமன்றத்தை இதுவரை நாடவில்லை” என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.