புரவியை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் – அமைச்சர் டக்ளஸ்
In இலங்கை December 2, 2020 12:04 pm GMT 0 Comments 1528 by : Jeyachandran Vithushan

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
புயல் நாட்டை தாண்டிச் செல்லும் வரை அனைவரையும் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்தோடு தேவையேற்படின் தகவல்களை தெரிவிக்க தேவையான கட்டமைப்புக்களின் தொலைபேசி இலக்கங்களை தெரிந்து வைத்துக் கொள்ளுமாறும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் அனர்த்த நிலைமைகளை கையாள்வதற்கு நாடளாவிய ரீதியில் அனர்த்த முகாமைத்துவக் கட்டமைப்புக்கள் மற்றும் முப்படையினரும் தயாராக இருக்கின்றனர் என்றும் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பிரதாணிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் ஏற்பட்ட தாழமுக்கம் புரவிப் புயலாக மாற்றமடைந்து குறித்த புயல் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடைப்பட்ட பிரதேசங்களுக்கு ஊடாக நாட்டை ஊடறுத்துச் செல்லும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக இன்று இரவு 7.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரையான காலப் பகுதியில் நாட்டினுள் நுழையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணமாக வடக்கு கிழக்கு பிரதேசத்தில் தொடர்ச்சியான மழையுடன் கூடிய கடுமையான காற்று வீசி வருவதுடன் கடல் நீர் மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.