புராதன இந்து இடங்களில் வழிபாடுகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் அனுமதிக்க வேண்டும்- சிவசேனை
புராதன இந்து இடங்களில் வழிபாடு செய்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அனுமதியளிக்க வேண்டும் என சிவசேனை அமைப்பின் வன்னி மாவட்டத் தலைவர் அ.மாதவன் கோரக்கை விடுத்துள்ளார்.
வவுனியா, நொச்சிமோட்டையில் அமைந்துள்ள அபிராமி அம்மன் ஆலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அவர் கூறுகையில், “தொல்லியல் திணைக்களம் புராதான இடங்களிற்குச் சென்று அங்கு பூசை வழிபாடுகளைச் செய்வதற்கு தடைவிதித்து வருகின்றது.
நாங்கள் வெறுமனவே ஆலயங்களை மட்டும் வழிபட்டு வராமல் இங்குள்ள புராதான இடயங்களையும் வழிபட்டு வருகின்றோம். அத்தோடு, எமது மக்களின் நோக்கமானது நாட்டில் சுமூகமான உறவினை மேம்படுத்துவதாகும். குறிப்பாக இராமாயணம், மகாபாராதம் போன்ற எங்களது இதிகாசங்கள் வாழ்வியல் முறைகளை எடுத்துக்காட்டுகின்றது.
நாங்கள் உங்களிடம் முன்வைக்கும் கோரிக்கையானது, வடமாகாணத்தில் உள்ள புராதான இடமான வெடுக்குநாரி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசகர் கைது மிகவும் கண்டிக்கத்தக்கதாக இருக்கிறது. தொல்லியல் திணைக்களமானது கொடுப்பனவைப் பெற்றுக்கொண்டு செயற்படுகின்றது.
ஆனால், நாங்கள் மண்னை, மரத்தை வழிபட்டு வருவதோடு குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக வழிபட்டு வருவதன் மூலமாக நாங்கள் எந்தவித கொடுப்பனவும் இல்லாமல் இந்த புராதான இடங்களைப் பாதுகாத்து வருகின்றோம்.
புராதான இடங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல் கலாசாரம் சார்ந்த விடயங்களைப் பாதுகாக்கும் நோக்குடனே, எங்களது ஆலயங்களும் அமைப்புக்களும் பரிபாலன சபைகள் என அனைத்துமே செயற்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவிலே குறுந்தூர்மலையிலே ஆதிகாலம் தொட்டு ஆதிலிங்கேஸ்வரர் வழிபாடு முறைகள் இருந்து வருகின்றது. ஆனால், தொல்பொருள் திணைக்களம் அங்கு சென்று வழிபாட்டு முறைகளிலே இருக்கக்கூடிய எங்களது வழிபாட்டுச் சின்னங்களைச் சிதைத்து இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
ஆகவே, ஜனாதிபதி மற்றும் பிரதமரும் நேரடியாகக் கவனித்து எங்களது வழிபாட்டு முறைகளை அறிந்த நீங்கள் எங்களது வழிபாட்டுக்காக அனைத்து ஆலயங்களிலும் சென்று வழிபடுவதற்கு அனைவருக்கும் சமத்துவமான சமவுரிமையை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.