புரெவி புயலின் எதிரொலி – கிளிநொச்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு
In இலங்கை December 7, 2020 9:00 am GMT 0 Comments 1604 by : Dhackshala
புரெவி புயலை அடுத்து கிளிநொச்சியில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 2 ஆயிரத்து 16 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 807 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், தொடர்ந்தும் பெய்துவரும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான நிவாரணங்கள் வழங்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இரணைதீவில் தங்கியுள்ள மக்களுக்கு கடற்படையினரின் உதவியுடன் உணவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பான முறையில் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும் இன்று காலை 9 மணி வரை திரட்டப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் 3 வீடுகள் முழுமையாகவும் 277 வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை 2 பாதுகாப்பு அமைவிடங்களில் 88 குடும்பங்களை சேர்ந்த 134 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 658 குடும்பங்களைச் சேர்ந்த 2031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 39 வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 249 குடும்பங்களைச் சேர்ந்த 676 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 07 வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன.
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 810 குடும்பங்களைச் சேர்ந்த 2117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 வீடுகள் முழுையாகவும் 197 வீடுகள் பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளன.
இரணைதீவில் அனர்த்தத்தினால் சிக்கியுள்ள 88 குடும்பங்களைச் சேர்ந்த 134 பேர் தொடர்ந்தும் 2 பாதுகாப்பு அமைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 299 குடும்பங்களைச் சேர்ந்த 983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகள் அந்தந்த பிரதேச செயலகங்கள் ஊடாக பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.