புலிகளின் தாக்குதலில் சரத் பொன்சேகா கொல்லப்பட்டிருந்தால் நல்லாயிருக்கும் என்ற நிலை- சிவாஜி
மாவீரர் தினத்தன்று புரெவி வீசியிருக்கலாம் என முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா சொன்னதில் இருந்து அவருடைய கொடூர மனநிலை வெளிப்பட்டுள்ளதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதனால், விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் சரத் பொன்சேகா கொல்லப்பட்டிருந்தால் நல்லாயிருக்கும் என எண்ணும் அளவுக்கு அவர் தமிழ் மக்களின் மனநிலைய மாற்றுவதாக சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான யாழில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், “நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் முன்னாள் இராணவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதில், குறிப்பாக புரெவி புயல் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாவீரர் தினத்தன்று வீசியிருக்கலாம் என்று சொன்னதில் இருந்து அவருடைய கொடூர மனநிலை வெளிப்பட்டுள்ளது.
கொடூர மன நிலையில் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் புரிந்தவர், இராணுவம் போர்க் குற்றத்தைப் புரிந்ததென்று இதே இராணுவத் தளபதி கூறியிருக்கிறார்.
இலங்கையில் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் நடைபெற்றுள்ளது எனவும் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு குழு தெரிவித்துள்ளது.
அதேபோல், இன்னொரு குழு 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டும் கணக்கில் வராமலும் உள்ளது என்றும் கூறியுள்ளது.
ஆகவே, இவ்வாறு கொன்றுவிட்டு ஏழாயிரம் பேர் கொல்லப்பட்டதாகச் சொல்லுவது தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற இழிவுபடுத்துகின்ற செயலாகும்.
இதைவிட இன்றைக்கு இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினுடைய கூற்றைப் பார்த்தால், இவர், புலிகளுடைய தற்கொலைப் படைத் தாக்குதலிலே கொல்லப்பட்டிருந்தால் நல்லாயிருக்கும் என்று மக்கள் நினைக்கக்கூடிய அளவிற்கு நிலைமை இருக்கிறது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்தமைக்காக தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனிகின்றார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.