பூசா சிறைச்சாலையில் 21 கைதிகள் தொடர்ந்தும் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

காலி, பூசா சிறைச்சாலையில் 21 கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துவருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முன்னர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 46 கைதிகளில் 25 பேர் போராட்டத்தினை கைவிட்டுள்ளனர்.
இதனிடையே, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களில் போதைபொருள் வர்த்தகம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழு உறுப்பினர்களான பொடி லெசி மற்றும் வெலேசுதா உள்ளிட்ட பிரதான போதை பொருள் வர்த்தகர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
கஞ்சிபானை இம்ரான் உள்ளிட்ட 46 கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர்.
எவ்வாறாயினும், பூசா சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன நேற்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
அத்துடன் இந்த போராட்டத்தினால் தாம் எவ்விதத்திலும் அச்சமடையப் போவதில்லை எனவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.