பெரியகல்லாறை அச்சுறுத்தும் கொரோனா: ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வருக்கு தொற்று!
In இலங்கை December 25, 2020 4:28 am GMT 0 Comments 1599 by : Yuganthini

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த மேலும் நான்கு பேர், கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
இதனடிப்படையில் பெரியகல்லாறில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
கடந்த 22ஆம் திகதி, செட்டிபாளையத்தில் இடம்பெற்ற விபத்தினை தொடர்ந்து அதில் பயணம் செய்த இருவர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில், அவர்களின் குடும்பத்தினை சேர்ந்த ஐந்து பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.
குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனையில் இருவர் அடையாளப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை தொடர்ச்சியாக அன்டிஜன் சோதனைக்குட்படுத்தம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் நேற்று (வியாழக்கிழமை) பெரியகல்லாறு பகுதியில் 27பேர் அன்டிஜன் சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் நான்கு பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், நான்கு பேரும் ஒரே குடும்பத்தினை சேர்ந்தவர்கள் எனவும் முன்னர் அடையாளம் காணப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் எனவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
இதேநேரம் பெரியகல்லாறு கலைமகள் வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதிக்குள் நுழைவதும் வெளியேறுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் பெரியகல்லாறு பகுதியில் பொதுமக்கள் தேவையற்ற வகையிலான நடமாட்டங்களை குறைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியகல்லாறிலுள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் மக்கள் நடமாட்டமும் குறைந்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.