பெருந்தோட்ட கம்பனிகளுக்கான வரியை அதிகரிக்க நடவடிக்கை: கொட்டகலை பிரதேச சபை

பெருந்தோட்ட கம்பனிகள் பிரதேச சபைகளுக்கு செலுத்தும் வரி மிக குறைந்த மட்டத்தில் இருப்பதால் தற்போதய சூழ்நிலைக்கேற்ப அதை மாற்றியமைக்க வேண்டியுள்ளதென கொட்டகலை பிரதேச சபை தலைவர் இராஜமணி பிரசாத் தெரிவித்துள்ளார்.
சபையின் மாதாந்த அமர்வில் தலைமையேற்று உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”சில பெருந்தோட்ட கம்பனிகள் தேயிலை செடிகளை தொழிலாளர்களுக்கு பராமரிப்பதற்காக உப குத்தகை அடிப்படையில் வழங்கியுள்ளன.
இவ்வாறு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேயிலை செடிகளின் பரப்பிற்கு கம்பனிகளால் வசூலிக்கப்படும் வரி கம்பனிகளால் பிரதேச சபைகளுக்கு செலுத்தும் வரியை விட இரண்டு மடங்காக காணப்படுகின்றது. இந்த விடயத்தையும், நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
தற்போது பெருந்தோட்ட நிறுவனங்கள் பிரதேச சபைகளுக்கு செலுத்தும் ஏக்கர் வரி, தொழிற்சாலை வரி, கட்டங்கள் அமைத்தலுக்கான அனுமதி மற்றும் அதற்கு செலுத்த வேண்டிய வரி போன்றவை குறைந்த மட்டத்தில் காணப்படுகிறது. அதுமாத்திரமின்றி அவை முறையான உள்ளூராட்சி மன்ற சட்ட திட்டங்களுக்கு அமைய பேணப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
அதனால் தோட்டங்கள் பிரதேச சபைகளுக்கு செலுத்த வேண்டிய வரிகள் தொடர்பான விடயங்களை மறுபரிசீலனை செய்து முறையான வரி வசூலிப்பு முறையை அறிமுகப்படுத்தவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.