பேச்சுவார்த்தை தோல்வி: நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடக்கும்- விவசாயக் குழுக்கள் அறிவிப்பு!

விவசாயக் குழுக்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் நடைபெற்ற ஐந்தாம் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அறிவிக்கப்பட்டபடி நாடு தழுவிய அளவில் வரும் எட்டாம் திகதி முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என விவசாயக் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை 10ஆவது நாளாகத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
டெல்லி எல்லையில் திரண்டுள்ள விவசாயிகள் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாளுக்குநாள் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் திரண்டுவருகின்ற நிலையில் போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது.
இதற்கிடையில், இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர விவசாயக் குழுக்கள் மற்றும் மத்திய அரசு இடையே இன்று ஐந்தாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், விவசாய குழுத் தலைவர்களுடன் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர், வர்த்தகம் மற்றும் உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன்போது, மத்திய அரசு தரப்பில் வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவர சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், விவசாயிகள் தரப்பில் வேளாண் சட்டங்களை முழுவதும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையில் நிலையாக இருந்தனர்.
இதனால், இரு தரப்புக்கும் இடையே எவ்வித முடிவுகளும் எடுக்கப்படாமல் ஐந்தாம் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததுடன் ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தை வரும் ஒன்பதாம் திகதி நடைபெறும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி நாடு தழுவிய அளவில் வரும் எட்டாம் திகதி முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் விவசாய குழுக்கள் நேற்று அறிவித்திருந்த நிலையில் போராட்டம் நடைபெறும் என அவர்கள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.