பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை விவகாரம்: ஆளுநரை கண்டிக்கிறார் முத்தரசன்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் விடுதலை குறித்து, மத்திய அரசுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிக்கை அனுப்பியுள்ளமை உள்நோக்கம் கொண்டதென, இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று (வெள்ளிக்கிழமை), செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மேற்படி கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கூறிய அவர், “தமிழக அரசின் தீர்மானத்திற்கும் தமிழக மக்களின் உணர்விற்கும் ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும்” எனக் கூறினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரையும் விடுதலை செய்வது தொடர்பில், தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் அண்மையில் பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், கடந்த வாரம் இடம்பெற்ற தமிழக அரசின் அமைச்சரவை கூட்டத்தில், குறித்த ஏழுபேரையும் விடுதலை செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தாடர்ந்து குறித்த தீர்மானத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் அவசியம் என்பதால் தமிழக அரசு ஆளுநரின் பதிலுக்காக காத்திருக்கிறது.
இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இவ்விடயம் தொடர்பில் மத்திய அரசின் ஆலோசனையை நாடியுள்ளார்.
இதை கண்டித்து பலரும் கருத்துரைத்து வரும் நிலையில், இரா.முத்தரசன் மேற்படி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.