பைசர் தடுப்பூசியை அடுத்த வாரம் பிரித்தானியாவில் பயன்படுத்த அங்கீகாரம்!
In இங்கிலாந்து December 2, 2020 7:34 am GMT 0 Comments 2082 by : Jeyachandran Vithushan

கொரோனா தொற்றுக்கு எதிரான பைசர் தடுப்பூசியை அடுத்த வாரம் பிரித்தானியாவில் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜேர்மனியின் பயோஎன்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி 95 சதவீதம் பலனை தருவதாக அறிவிக்கப்பட்டது.
அந்தவகையில் தற்போது பைசர் / பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பரவலான பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடாக பிரித்தானியா திகழ்கிறது.
இந்நிலையில் அதிக முன்னுரிமை வழங்கப்படும் குழுக்களைச் சேர்ந்த மக்களுக்கு அடுத்த வாரம் முதல் இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படுவது ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மருந்துகளாக வழங்கப்பட வேண்டிய இந்த தடுப்பூசியின் நான்கு கோடி மருந்துகளுக்கு பிரித்தானியா ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளது. இது இரண்டு கோடி பேருக்கு கொரோனா தொற்றுக்கான நோய் எதிர்ப்பாற்றலை உண்டாக்க போதுமானது என எதிர்பார்க்கப்படுகின்றது.
வழக்கமாக தடுப்பூசி ஒன்று உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டு, ஆராய்ச்சி நிலையில் இருந்து பயன்பாடு வரை வருவதற்கு 10 ஆண்டுகள் வரை ஆகும்.
ஆனால் பைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்துள்ள இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி வெறும் பத்தே மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதுவரை உலகில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் மிகவும் குறைவான காலத்தில் பயன்பாட்டுக்கு வந்தது இந்தத் தடுப்பூசிதான் என கூறப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.