பொத்துவில்- பொலிகண்டிபேரணி- யாழ்.மாநகர முதல்வரிடம் வாக்குமூலம்!
In இலங்கை February 19, 2021 10:15 am GMT 0 Comments 1171 by : Vithushagan

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனிடம் பருத்தித்துறை பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர்.
யாழ்.மாநகர சபை முதல்வர் அலுவலகத்திற்கு இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) சென்றிருந்த பொலிஸார் வாக்கு மூலத்தை பதிவு செய்தனர், அதன்போது சிங்கள மொழியில் வாக்குமூலத்தை பொலிஸார் பதிவு செய்த போது “ எனக்கு வாசித்து புரிந்து கொள்ளமுடியாத மொழியில் பதிவு செய்யப்படும் வாக்குமூலத்தில் கையொப்பம் இட மாட்டேன் “ என முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கூறியமையை அடுத்து அவரது வாக்கு மூலத்தை தமிழ் மொழியில் பதிவு செய்தனர்.
இதேவேளை குறித்த பேரணியில் கலந்து கொண்ட குற்றசாட்டில், மோட்டார் சைக்கிள் இலக்கத்தின் அடிப்படையில் பருத்தித்துறையை சேர்ந்த இளைஞன் ஒருவரை பருத்தித்துறை பொலிஸார் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை சுமார் 6 மணி நேரங்களுக்கு மேலாக தடுத்து வைத்து விசாரணை செய்த பின்னர் , அவரது வாக்கு மூலத்தை பதிவு செய்த பின்னர் விடுவித்திருந்தனர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் , குறித்த போராட்டம் மக்களின் பேரெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நீதிமன்ற தடையை மீறி போராட்டம் நடத்தப்பட்டமை தொடர்பில் பருத்தித்துறை , நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிசார் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு. தாக்கல் செய்துள்ள நிலையில் வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில் பொலிசார் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அவர்களது வாக்குமூலங்களை பெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.