பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணி: யாழ். நீதிமன்றம் தடையை நீக்கி அதிரடி உத்தரவு!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் நாளைவரை ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த வழங்கிய தடை உத்தரவை நீதிமன்றம் நீக்கியுள்ளது.
பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு ஒருமுக விளக்கத்தில் வழங்கிய கட்டளையை பிரதிவாதிகள் முன்வைத்த ஆட்சேபனையை அடுத்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் நீக்கியது.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை தடை உத்தரவு வழங்கப்பட்டது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சட்டத்தரணி க.சுகாஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வேலன் சுவாமிகள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரநிதிகள் உள்ளிட்டோருக்கு இந்தத் தடையுத்தரவு வழங்கப்பட்டது.
பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கொவிட்-19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பங்கள் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரால் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன.
அத்துடன், ஜெனிவா மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் நாட்டுக்குக் களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் எடுத்துரைத்தனர்.
இதனடிப்படையில் பிரதிவாதிகள் முன்னிலையாகாத நிலையில் தடை உத்தரவை நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து, இன்று இந்தத் தடை உத்தரவு வழக்குகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், வி.திருக்குமரன் உள்ளிட்டோர் முன்னிலையாகி கடும் ஆட்சேபனையை முன்வைத்தனர்.
இதனால், ஒருமுகக் கட்டளையாக வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்கிய நீதிமன்றம் கொவிட்-19 நோய்த்தொற்று, சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டால் அதன் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்குமாற பொலிஸாரை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.