போட்டித் தடைக்கு பிறகான முதல் போட்டியிலேயே சகிப் அபார பந்துவீச்சு: மே.தீவுகளை வீழ்த்தியது பங்களாதேஷ்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
டாக்கா மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 32.2 ஓவர்கள் நிறைவில் 122 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மேயர்ஸ் 40 ஓட்டங்களையும் ரோவ்மன் பவல் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், சகிப் ஹல் ஹசன் 4 விக்கெட்டுகளையும் ஹசன் மொஹமத் 3 விக்கெட்டுகளையும் முஷ்டபிசுர் 2 விக்கெட்டுகளையும் மெயிடி ஹசன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 123 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 33.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது பங்களாதேஷ் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டமீம் இக்பால் 44 ஓட்டங்களையும் சகிப் ஹல் ஹசன் மற்றும் முஷ்டபிகுர் ரஹும் ஆகியோர் தலா 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, போட்டித்தடைக்கு பிறகு விளையாடிய முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளையும் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட சகிப் ஹல் ஹசன் தெரிவுசெய்யப்பட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.