போராடும் விவசாயிகளை சந்திக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் தடுத்து நிறுத்தம்!

டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளைச் சந்திப்பதற்குச் சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குடியரசு தினத்தில் விவசாயிகள் சார்பில், டெல்லியில் நடந்த ட்ரக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி அருகே காஸிப்பூரில் போராடும் விவசாயிகளை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லியில் இருந்து பேருந்தில் சென்றனர்.
இந்தக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான, கனிமொழி, திருச்சி சிவா, திருமாவளவன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
அவர்கள், காஸிப்பூர் எல்லையை அடைந்த நிலையில், விவசாயிகள் சந்திப்பால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக டெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.