போரின் பின்னர் பெண்களிற்கான உரிமைகள் முழுமையாக கிடைக்கவில்லை: ரொபினா
இலங்கையில் போர் நிறைவடைந்துள்ள போதிலும், பெண்களிற்கான உரிமைகள் முழுமையாக கிடைத்துள்ளதாக தெரியவில்லை என தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ ரொபினா பி. மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியின் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், “எமது நாடும் சில உரிமைகளிற்காக போராடிய நாடு. இலங்கையிலும் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. போர் நிறைவடைந்துள்ள போதிலும், பெண்களிற்கான உரிமைகள் முழுமையாக கிடைத்துள்ளதாக தெரியவில்லை. எமது நாட்டுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாணம் அதே பிரச்சினைகளின் மத்தியில் காணப்படுகின்றது.
எமக்கு ஒரு நல்ல தலைவராக நெல்சன் மண்டேலா செயற்பட்டார். நாம் அவர் பாதையில் சென்று 94ஆம் ஆண்டு அரசியலமைப்பில் வெற்றி கண்டோம். இன்று பெண்களிற்கு அதிக முக்கியத்துவம் எமது நாட்டில் வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூர் அதிகார சபகளில் 50 வீதம் பெண்கள் தமது பிரதிநிதித்துவத்தினை பெற்றுள்ளார்கள். இன்று உலகில் அரசியல்வாதிகளில் அதிகம் பெண்கள் உள்ள நாடுகள் பட்டியலில் 10 நாடுகளிற்கும் எமது நாடும் உள்ளது.
அதே போன்று இன்று இலங்கையிலும் அரசியலமைப்பு வரையப்பட்டு வருகின்றது. இச்சந்தர்ப்பத்தில் பெண்களிற்கான உரிமையை வலுவூட்டும் முக்கிய சரத்துக்களை அரசியலமைப்பில் உள்ளிடுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்” என கூறினார்
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.