போரின் மூலம் பிரச்சினைகளை தீர்க்க முடியாது: பாகிஸ்தான்
இந்தியாவுடனான எந்த பிரச்சினையையும் போரினால் தீர்த்துவிட முடியாது என பாகிஸ்தான் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது கூட்டத்தொடர் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் அங்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்நிலையில், கூட்டத்தொடரில் உரையாற்றிய பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, இந்தியாவுடனான எந்த பிரச்சினையையும் போரினால் தீர்த்துவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அமைதிக்கான வழியில் இந்தியா ஒரு அடி முன்னெடுத்து வைத்தால், பாகிஸ்தான் இரண்டடி எடுத்து வைக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்ததையும் சுட்டிக்காட்டினார்.
நாங்கள் அமைதிக்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.
இரு நாடுகளுமே அணு ஆயுத வலிமை மிக்க நாடுகளாக இருக்கும் நிலையில் பிரச்சினைகளை போரினால் சரிசெய்துவிட முடியாது.
போர்முறை என்பது இதற்கு தீர்வாகாது. பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்திய – பாகிஸ்தான் எல்லையில் இடம்பெறும் மோதல்கள், அத்துமீறல்கள் தொடர்பில் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.