போலி அரசியலமைப்பிற்காக ரணிலை ஆதரிக்கும் கூட்டமைப்பு: கஜேந்திரகுமார் சாடல்!
போலி அரசியலமைப்பிற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைகள் தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உயர்பீடம் கடந்த-02 ஆம் திகதி கூடி ஆராய்ந்த பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்கள்.
மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அடுத்த நாடாளுமன்ற அமர்வில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்துத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தங்கள் வாக்குகளைச் செலுத்தவுள்ளதாக அறிவித்திருக்கின்றார்கள்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்திற்குப் பின்னர் பிரதமரை நீக்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையென்ற விடயமும், நாடாளுமன்ற அமர்வுகளை நிறுத்தி ஒத்தி வைத்தமை ஜனநாயகத்துக்கு விரோதமான செயலெனவும் தமிழ்த்தேசியக் கூட் டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த இரண்டு விடயங்களுக்காகவும் மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமித்திருக்கும் முடிவுக்கெதிராகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தங்களுடைய வாக்குகளைப் பயன்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
தற்போதைய அரசியல் நெருக்கடி ஆரம்பமான போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முகங்களைப் பார்க்காமல் கொள்கைகளைப் பார்த்துத் தான் முடிவெடுப்போம் எனக் கூறியிருந்தார்.
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்தல் ஆகிய விடயங்களுக்கு வாக்குறுதிகள் வழங்கும் தரப்பினருக்கு மாத்திரமே தமது ஆதரவு வழங்கப்படுமெனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு அவர் தெரிவிக்கும் போது அரசியலமைப்பை மீறிய விடயம் சம்பந்தனுக்குத் தெரிந்திருக்கவில்லையே.
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் தமிழ்மக்களுக்கு நன்மைகள் எதுவுமில்லாத நிலையில் வரவிருக்கின்ற அரசியலமைப்பும் ஒரு ஒற்றையாட்சி அரசியலமைப்பாகவே காணப்படுகின்றது. இவ்வாறான நிலையிலும் அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டுமென கூட்டமைப்பு நிபந்தனை விதித்தது.
ஆனால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறான எந்த விடயங்களும் குறிப்பிடப்படவில்லை. தற்போதைய பேருக்காகவேனும் எந்தவொரு விடயங்களையும் தமிழருக்கு வழங்குவது தொடர்பாக வெளிக் காட்ட முடியாத நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க காணப்படுகின்றார். இதனால் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தற்போதைய நிலையில் எந்தவொரு நிபந்தனைகளையும் விதிக்க முடியாத நிலையிலிருக்கின்றது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்திய மேற்கு நாடுகளின் கைக்கூலிகள். மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தமை சீனாவின் பின்னணியில் நடந்த நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் எஜமானர்கள் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்கு நீங்கள் நிபந்தனையில்லாத ஆதரவை ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்க வேண்டுமெனத் தெரியப்படுத்தியிருக்கின்றன.
மகிந்த ராஜபக்ச தமிழ்மக்களுக்கு இதுவரை எவ்வித நன்மைகளையும் செய்யவில்லை, இனியும் செய்யப் போவதில்லை எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் கடந்த மூன்றரை வருட காலமாகத் தமிழ்மக்களுக்கு என்ன நன்மை செய்தார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது“ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.