மகனை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய்…! கதறி அழுத பெற்றோர்
In இப்படியும் நடக்கிறது August 12, 2019 9:56 am GMT 0 Comments 3453 by : Vithushan

கேரளா – மலப்புரம் அருகே உள்ள கொட்டகுன்னு அருகே உள்ள சாத்தக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சரத். இரண்டு வருடத்துக்கு முன் திருமணம் செய்த தனது காதல் மனைவி கீத்து, தனது ஒன்றரை வயது குழந்தை மற்றும் தாய் சரோஜினி ஆகியோருடன் வசித்துவந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை மதியம் இரண்டு மணியளவில் பெருமழை பெய்ய கீத்துவும், ஒன்றரை வயது மகன் துருவ் உடன் வீட்டின் உள்ளே இருந்துள்ளனர். தாய் சரோஜினியுடன் சரத் வெளியே இருந்துள்ளார்.
அப்போது மழையோடு சேர்த்து கடும் நிலச்சரிவு ஏற்பட `நிலச்சரிவு வருகிறது ஓடுங்கள்’ எனக் கத்தியபடியே சரத் ஓட அதற்குள் ஒட்டுமொத்த வீடும் மண்ணுக்குள் புதைந்துள்ளது. இதில் வீட்டுக்குள் இருந்த கீத்து, ஒன்றரை வயது சிறுவன் துருவ் மற்றும் சரோஜினி ஆகிய மூவரும் மண்ணுக்குள் புதைய சரத் மட்டும் தப்பித்துவிட்டார்.
கிட்டத்தட்ட மூன்று நாள்கள் ஆகிவிட்டது. இன்று கீத்து மற்றும் துருவ்வின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கீத்து தனது மகன் துருவை மார்போடு அணைத்தபடியே இறந்துகிடந்தது, மீட்புக் குழுவினரையும் அங்கிருந்தவர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.
சரத்தும் கீத்துவும் இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்துவந்துள்ளனர். காதலுக்கு கீத்துவின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்காததால் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் இருவருக்கும் குழந்தை பிறந்துள்ளது. துருவ் பிறந்தபிறகு குடும்பத்தினரின் கோபம் தணிந்துள்ளது. இதனால் இருவரையும் மீண்டும் தங்கள் வீட்டுக்கு அழைக்க திட்டமிட்டுள்ளனர் கீத்துவின் குடும்பத்தினர்.
ஆனால் அதற்குள் இப்படி ஒரு சோகம் நிகழ சம்பவ இடத்துக்கு ஓடியுள்ளனர் கீத்துவின் பெற்றோர். தன்குழந்தையை மார்பில் அணைத்தபடி உயிரிழந்ததை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர்.
“தங்கள் மகள் மீது அதிகமான பாசம் வைத்திருந்தோம். அதனால்தான் அவள் காதல் திருமணம் செய்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் குழந்தை பிறந்தது எனத் தெரிந்ததும் அவர்களை வீட்டுக்கு அழைக்க முடிவு செய்திருந்தனர். கடைசியில் கீத்துவை அவர்களால் சடலமாகத்தான் பார்க்க முடிந்தது” எனக் கண்ணீர் வடிக்கிறார்கள் அவர்களது உறவினர்கள்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.