மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலையே தமிழகத்திற்கும் ஏற்படும் – இராதாகிருஷ்ணன்
In இந்தியா February 24, 2021 4:20 am GMT 0 Comments 1171 by : Krushnamoorthy Dushanthini

மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றாவிட்டால், மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலையே தமிழகத்திற்கும் ஏற்படும் என சுகாதாரத் துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ”தமிழகத்தில் 4 ஆயிரம் பேர்தான் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 0.48 சதவீதத்துக்கும் கீழே உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகக் கொரோனா தொற்று தினந்தோறும் 450க்கும் குறைவாகவே உறுதியாகி வருகிறது. ஆனாலும் இது எங்களுக்கு அச்சம் தரக்கூடியதாகவே உள்ளதாகக் கருதுகிறோம்.
சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே நேரத்தில் தொற்று உறுதி செய்யப்படுவதைக் காண முடிகிறது. ஹைதராபாத்தில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பதை நினைவில் கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மக்கள் முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவற்றை நிறுத்திவிட்டனர். இந்த வழக்கங்களைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலை தமிழகத்திலும் ஏற்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.