மக்களவைத் தேர்தல்: தமிழக மக்களின் வெளிப்பாடு என்ன? – ஆய்வாளர்கள் கருத்து

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 72 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், அரசியல் நோக்கர்கள் இரு விதமான கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
17ஆவது மக்களவைக்கான தேர்தல் நடந்து வருகிறது. 7 கட்டங்களாக நடத்தப்படும் மக்களவைத் தேர்தலில் 2ஆவது கட்டமாக 95 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில் தமிழக்தில் வேலூர் தொகுதி நீங்கலாக 38 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒருதொகுதிக்கும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது.
இதில் தமிழகத்தில் மட்டும் 72 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரபா சாஹூ தெரிவித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 73 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் இந்த முறை 72 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
பொதுவாக வாக்கு சதவீதம் அதிகரிக்கும் போது, மக்கள் எடுக்கும் முடிவு ஏதாவது அணிக்கு சாதகமாக இருக்கும் என்பதையே காட்டுகிறது. கடந்த முறை 39 தொகுதிகளில் கன்னியாகுமரி, தர்மபுரி தொகுதிகளைத் தவிர 37 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வென்றது. இந்த முறை மக்கள் எந்த மாதிரியான முடிவை எடுத்துள்ளார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பாவே இருக்கிறது.
ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை மாநில அரசுக்கு எதிரான ஒரு மனநிலையும், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டுடனும் மக்கள் வாக்களித்திருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து எழுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமான மாலன் நாரயணன் கூறியதாவது,
“தமிழகத்தில் 73 சதவீதம் அளவுக்கு வாக்குப்பதிவு இருக்கக்கூடும். இது ஒருகுறிப்பிடத்தகுந்த வாக்குப்பதிவு சதவீதம்தான். இந்த 73 சதவீதம் என்பது, இயல்பாக அல்லது செயற்கையாகவோ மக்கள் தூண்டப்பட்டு வாக்களித்திருக்கலாம் என்பதை காட்டுகிறது.
மக்கள் ஏதாவது ஒரு தரப்பினருக்கு,அரசியல் கட்சிக்கு அதிகமாக வாக்களித்திருக்கலாம். அது தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு கூட இருக்கலாம்.
அதேசமயம், தி.மு.க. தலைவர்கள் தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. வாக்கு மையத்தை கைப்பற்றுகிறார்கள் என்று முறைப்பாடு அளித்தார்கள். இந்த செயற்பாடு அவர்கள் தேர்தலில் வெற்றி பெறும் நம்பிக்கையில்லை என்பதை காட்டுகிறது. தொடக்கத்தில் தி.மு.க. 40 தொகுதிகளில் வெல்வோம் என்று கூறினார்கள். ஆனால் தி.மு.க.வுக்கு சாதகமாக எந்தவிதமான அலையும் வீசவில்லை. ஆனால், அவர்களுக்கு சாதகமான போக்கு தென்பட்டது”என்றார்.
அதேபோல், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஒஃப் டெவலப்மென்ட் ஸ்டடிஸ் மையத்தின் துணை பேராசிரியர் சி. லட்சுமணன் கூறியதாவது:
“தேர்தலில் பதிவான வாக்குப்பதிவை பார்க்கையில், தி.மு.க. அனைத்து இடங்களிலும் வெல்லக்கூடும். அ.தி.மு.க. மிகப்பெரிய கூட்டணியை அமைத்தபின் தி.மு.க.வின் நம்பிக்கை சற்று குறைந்தது. அதன்பின் சமூக ஊடங்களில் பிரசாரத்தையும் வேகப்படுத்தியது தி.மு.க. அதற்கு ஆதரவாக காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.தி.மு.க., கே.எம்.டி.கே., சி.பி.ஐ., சி.பி.எம்., வி.சி.கே., ஐ.ஜே.கே. கட்சிகளும் களமிறங்கின. இந்த தேர்தல் முடிவுகள் பலருக்கு அதிர்ச்சிகரமான முடிவுகளை அளிக்கும்.
அத்துடன், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் குறிப்பிடத்தக்க வாக்குகள் எதையும் பெறாது. அதாவது, மக்கள் இனிமேலும் நடிகராக இருந்து அரசியலுக்கு வருபவர்களுக்கு ஆதரவாக இருக்கமாட்டார்கள். அதேபோல், பா.ம.க. கட்சியும், வன்னியர் சமூகத்தினர் அதிகமாக வாழும் பகுதிகளில் கூட தங்களின் வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்ளமுடியாமல் தோல்வி அடையும்” என்று குறிப்பிட்டார்.
மேலும், அரசியல் ஆய்வாளர் ஜான் ஆரோக்கிய சாமி கூறியதாவது,
“தமிழகத்தைப் பொறுத்தவரை பணம்தான் இங்கு ராஜா. எந்த முன்னணிக்கும் இங்கு சாதகமாக அலை வீசவில்லை. அரசுக்கு எதிரான நிலைப்பாடு இருக்கிறதென்றால், காலையிலேயே அதிகமான வாக்குப்பதிவு இருந்திருக்க வேண்டும், மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்திருப்பார்கள். ஆனால், காலை நேரத்தில் அதிகமான மக்கள் வாக்கு மையத்தில் இல்லை. வாக்கு சதவீதம் என்பது மாலை நேரத்தில்தான் அதிகரிக்கத் தொடங்கியது.
சென்னையில் வாக்குப்பதிவு மிக மோசமாக இருந்தது. நகர்புறங்களிலும் அதேபோன்றுதான் இருந்தது. கிராமப்புறங்களில்தான் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக காணப்பட்டது. இம்முறை மத ரீதியாக மக்கள் பிரியவில்லை.
மிகப்பெரிய ஆளுமைகளான முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் இல்லாததன் வெற்றிடத்தை இரு கட்சிகளும் உணர்வார்கள்.
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், இந்த முறையும் தனித்து போட்டியிட்டு பிரசாரத்துக்கு சென்றிருப்பார். அதேபோல கருணாநிதியும், மத்திய, மாநில அரசுக்கு எதிராக நிலவும் மக்களின் மனநிலையை தங்களுக்கு சாதகமாக மாற்றியிருப்பார்.
இம்முறை, தி.மு.க., அ.தி.க.மு. கட்சிகளும் குறிப்பிடத்தக்க இடங்களில் வெல்லும். இதில் அதிகமான இடங்களில் அதாவது 25 இடங்களுக்கு குறைவில்லாமல் தி.மு.க. வெல்லும்” என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.