மக்களிடம் மன்னிப்பு கோரி கண்ணீர் விட்ட வடகொரிய தலைவர் கிம்!

குடிமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் தவறியதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், நாட்டு மக்களின் முன்னிலையில் கண்ணீர் விடும் காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
வடகொரியாவை ஆளும் தொழிலாளர் கட்சி தோற்றுவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதன்போதே வடகொரிய தலைவர் மன்னிப்பு கோரினார்.
அத்துடன், நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இராணுவ வீரர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார். பதிலுக்கு இராணுவ வீரர்களும் கண்ணீருடன் மரியாதை செலுத்தினர்.
இதன்போது உரையாற்றிய தலைவர் கிம், ‘நாட்டு மக்கள் வானத்தை விட உயரமாகவும், கடல் போன்று ஆழமாகவும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
ஆனால், அதை நான் திருப்திகரகாக செய்ய தவறிவிட்டேன். நான் உங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, இதற்காக மிகவும் வருந்துகிறேன். இந்த நாட்டை வழிநடத்திய தந்தை மற்றும் தாத்தவுக்கு பிறகு இந்த நாட்டை வழி நடத்தும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கு மக்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி, என் முயற்சிகள் எப்போதும் நேர்மையாகவே இருக்கும், தங்கள் வாழ்க்கையில் உள்ள சிரமங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது’ என கூறினார்.
மேலும், அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகளில் இருந்து மீண்டு வரவும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும் உதவியதற்காக இராணுவத்தினருக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்தார். இராணுவ வீரர்களுக்கு அவர் ஆற்றிய உரையைக் கண்டு சில இராணுவ வீரர்களும் உணர்ச்சியில் கண்கலங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் இறையாண்மையை பாதுக்காப்பதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னால் உறுதியளிக்கப்பட்ட ‘ஹவாசாங்-16’ புதிய ஏவுகணை, கடந்த 10ஆம் திகதி கொரிய தொழிலாளர் கட்சி நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விழாவின் போது காட்சிப்படுத்தப்பட்டது.
அதேபோல் அதே விழாவில் புதிய ‘புகுக்சோங்-4’ எஸ்.எல்.பி.எம் பரிமாணங்களை கொண்ட நீர்மூழ்கி ஏவுகணையையும் வடகொரியா அறிமுகப்படுத்தியது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.